Tamil
Call +44 208 151 0039



ஊர்காவற்றுறை கரம்பனை சேர்ந்த அமரர் இராமலிங்கம் கந்தையா(தபால் ஊழியர்) அமிர்தம் தம்பதிகளுக்கு மூத்தமகனாக அமரர் கந்தையா ஜீவகாருண்யம் அவர்களும் திலகவதி, புனிதவதி ஆகிய இரண்டு பெண்பிள்ளைகளும் மழலைச் செல்வங்களாக பிறந்தார்கள். அமரர் ஜீவகாருண்யம் அவர்கள் சிறுவயதில் தனது சொந்த ஊரான ஊர்காவற்றுறை கரம்பனில் கல்லூரி வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
கல்வி பயிலும் காலத்தில் தனது குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு தனது தாய் சகோதரருடன் கொழும்பில் தங்கி சிறிய தாயாருடன் சேர்ந்து புடவைக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். 1958ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது கொழும்பில் அகதிகளாக்கப்பட்டு கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு வந்து யாழ் வண்ணார்பண்ணையில் வசித்தார். அதன்பின் வன்னேரியிலும் 1969ல் மல்லாவி யோகபுரம் மத்தியில் குடியேறினார். யோகபுரம் மத்தி மூவேந்தர் கிராம முன்னேற்ற சங்கம் என்னும் பெயரையும் தானே சூட்டி வைத்தார். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களான கதிரவேலு பிள்ளையானுடனும், ஆலாலசுந்தரம் அவர்களுடனும் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டார். 1976ம் ஆண்டு தனது 40 வயதில் இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைத்தார். கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த சின்னத்தம்பி சிரோண்மணி தம்பதிகளின் மூத்த மகளான கோமளாம்பிகையை மணம் முடித்தார். பிள்ளைச் செல்வங்களான அரவிந்தன், நவநீதன், லிங்கரூபன், பொன்குமரன், நேசகாந்தினி ஆகிய ஐவரும் பிள்ளைகளாக பிறந்தார்கள். இவர் தனது நான்காவது மகனான பொன்குமரனுக்கு தனது சகோதரியின் மகளான நளினியை அவர்களின் விருப்பத்திற்கு மணம் முடித்து வைத்தார்.
1983ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட வன்செயல்களால் இடம் பெயர்ந்து மல்லாவி சந்தையில் அகதிகளாக வசித்த தமிழ் உறவிகளுக்காக முல்லைத்தீவு கச்சேரியில் காணிக்கான அனுமதி பெற்று வரும் போது 1984-09-05 திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் மீட்கப்பட்டார். அதன் பின் தனது அரசியல் சமூகப் பணிகளில் முழுமூச்சாக தன்னை ஈடுபடுத்தினார். இதன் பின் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது பிரஜைகள் குழு [cltion commente] வில் இருந்து தனது சமுகத்திற்கு அளப்பரிய சேவைகள் ஆற்றி வரும் வேளையில் துணுக்காய் இந்திய இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்த தமிழர்களை விடுவிக்க சென்ற போது இந்திய இராணுவத்தால் கடுமையாக தாக்கபட்டு மீண்டும் பல வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் .
1991ம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா விமானப்படை தாக்கிய போது யோகபுரம் மத்தியில் இருந்து வெளியேறி அயல் கிராமமான திருநகர் பகுதியில் தற்காலிகமாக குடியேறினார். இலங்கை சென்சிலுவை சங்க முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கிளையின் கெளரவ செயலாளராகவும் கடைமையாற்றி முல்லைத்தீவு சென்சிலுவை சங்கத்தின் கீழ் வறுமைப்பட்ட மக்களுக்கான தன்னாலான உதவிகளை வழங்க மிகவும் கடினமாக உழைத்தார். இக் காலகட்டத்தில் மல்லாவி மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராக தன்னால் தனது கல்வி சமூகத்திற்கு ஆற்றக் கூடிய பணிகளையும் ஆற்றியுள்ளார். மேலும் மல்லாவி சிவன் ஆலய செயலாளராகவும், பாண்டியன் குளம் துணுக்காய் அபிவிருத்திக் களகசெயலாளராகவும், அந்நிறுவனத்தின் இணைப்பாளராகவும் பொதுப்பணிகளில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டார்.
2006ம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் ஆலோசகராகவும் கடமையாற்றினார். நாட்டின் உள்நாட்டு மோதலால் பாரிய இடப்பெயர்வை சந்தித்து கிளிநொச்சி, கைவேலி என தொடர்ச்சியாக பல இடப்பெயர்வைச் சந்தித்து வள்ளிபுனம் பகுதியில் பதுங்கு குளிக்குள் இருந்த வேளை இராணுவத்தினரால் ஏவப்பட்ட எறிகணை வெடித்து தலையிலும் காலிலும் சிறு காயங்களுடன் மீண்டும் மாத்தளன் நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
மாத்தளன் பகுதியில் ஏற்பட்ட தொடர்ச்சியான தாக்குதலில் தனது குடும்பத்தை பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. மாத்தளன் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றிய வேளைதான் குடியிருந்த தரப்பால் கொட்டகைக்குள் வந்து இராணுவத்தினர் இவரை ஏற்றி ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தில் சேர்த்தனர். பல தினங்களின் பின்னரே தனது குடும்பத்தினருடன் சேரும் நிலை ஏற்பட்டது. இருந்தும் தனது மூன்றாவது மகனைக் காணாமல் போனோர் என்னும் பட்டியலில் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். மகனின் பிரிவும் மனதில் வேதனையும் இவருக்கு நோய்கள் வரக் காரணமாக இருந்தது. கால ஓட்டத்தில் முகாமில் இருந்து வெளியேற சந்தர்ப்பம் ஏற்பட்டது.
வவுனியாவில் சிறிது காலம் வசித்து வந்த இவர் மல்லாவிக்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்டு அங்கே தங்கி தனது பழைய பக்கங்களை திருப்பி அதன் வழியில் மீண்டும் அரசியல் சமூகப் பணி என விரைந்து செயற்பட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போதே தான் ஒரு நோயாளி என்பதனையும் கவனத்தில் கொள்ளாது துடிப்புடன் பிரச்சார நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டார். இவர் ஆரம்ப காலங்களில் தந்தை செல்வாவின் பணிப்பில் திருமலையில் தழிழ் குடியேற்றம் செய்வதில் மும்முரமாக செயற்பட்டு கடும் காயங்களுக்கு உட்பட்டும் தனது செயலில் வெற்றிகண்டார்.
காலம் எவருக்காகவும் காத்து இருப்பது இல்லை. காலங்கள் ஓடின நோயின் உச்சகட்டம் அவரை வதைத்தது மல்லாவி, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பல இடங்களில் தனது பணிகளை செய்த இவர் சிறிது காலம் வீட்டிலும் சிறிது காலம் வைத்தியசாலையிலுமாக காலத்தை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி 08-08-2012 அன்று இவ்வுலக வாழ்க்கையை நிவர்த்தி செய்தார்.
