Tamil
Call +44 208 151 0039


குமாரசாமி பரமானந்தம் அவர்களின் காலச்சுவடுகளில் பதிந்த தருணங்கள்
இயற்கை எழில் கொஞ்சும் இலங்கைத் திருநாட்டின் இனிதான வளங்களும், தாய்மொழிப் பெருமையும். தருநல் இறைபக்தியும், தெய்வீக அருள் பொழியும் ஆலயங்களும், பல்கலையும் சிறந்தோங்கும் அழகுபொழில் யாழ்ப்பாணம். அதன்பால் அலைகள் தவழும் நிலப்பரப்பில் நீண்ட பெருந்தீவாம் நெடுந்தீவு, அங்கே இயற்கை வளங்களும் இனிதான வரலாறும், இதமான காற்றும், தன இலாப உற்பத்திகளும், உயிர் வாழும் மருத்துவமும். உயர்வான கல்வியும், அழகான இல்லங்களும், கருங்கற்பாறைகளும், கல்நீள் வேலிகளும், கமகமக்கும் பூஞ்சோலைப் பாதைகளும், சுற்றுலா விடுதிகளும். அரசர்கள் வாழ்ந்த அதிசய உயர் கோட்டைகளும், அரண்மனைகள் அனைத்துமாக கற்பகத்தருவும் தேடற்கரிய இயற்கை மூலிகைகளும் நிறைந்து கம்பீரமாகக் காட்சி தரும் நெடுந்தீவு. சைவமும் தமிழும் தழைத்தேங்கும் நெடுந்தீவில் இருமரபும் தூய திரு. தனிநாயக முதலி வழித்தோன்றலாய் மணியகாரன் பேரன் கணபதிப்பிள்ளை குஞ்சாச்சிப்பிள்ளை இராமநாதர், நடுவழிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் பேரனும் மணியகாரன் பேரன் கணபதிப்பிள்ளை, குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்புச் செல்வங்களின் ஆறாவது மகன் கணபதிப்பிள்ளைகுமாரசாமி. சின்னத்தங்கம் நாகம்மாதம்பதிகளின் அருமை மூத்த மகனும், விஸ்வநாதன் செங்கமலம் தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும் செல்லம்மா சங்கரப்பிள்ளை. நாகமுத்து வைத்திலிங்கம், இராமலிங்கம் வள்ளியம்மை, குணநாயகம் லச்சுமி, இராமநாதர், ராசமணி. தம்பதிகளது ஆசைப் பெறாமகனும் நாகநாதி, அன்னப்பிள்ளை, ஐயம்பிள்ளை, கற்பகம் அம்பலவாணர், காமாட்சி பெருமையினார். பராசக்தி, மங்களம், அம்பலம் தம்பதியினர்களது அன்பு மருமகனும் குடும்பத்தார் செல்வங்களாக அவதரித்த பிள்ளைகளின் அன்புமிகு கணபதிப்பிள்ளை. குமாரசாமி சின்னத்தங்கம், நாகம்மா தம்பதிகளின் மூத்தமகனாகவும். புஸ்பராணி, பேரின்பநாதன், பத்மராணி பத்மநாதன், கமலராணி. மங்களேஸ்வரன், கேதீஸ்வரன். வரதராணி, சசிராணி அனைவரின் அன்பு அண்ணாவும் அவர் தம் குடும்பத் தலைவனாக 26.04.1954 அன்று திருவாளர். குமாரசாமி பரமானந்தம் இறைவன் திருவருளால் இவ்வுலகில் அவதரித்தார்.
அன்னைமண் அழகுகொஞ்ச பெற்றோர் அன்பும். அரவணைப்பும் நிறைந்து மூன்று வயது வரை நெடுந்தீவில் பண்பின் செல்லப்பிள்ளையாக உறவுகளின் உரிய அன்போடு வளர்ந்து வருகையில் பெற்றோர் இடமாற்றமாக கிளிநொச்சி நோக்கி வரலாயிற்று. 1954இல் வன்னேரிக்குளக் கிராமத்திற்காக வளங்கப்பட்ட குடியேற்றத் திட்டத்தில் அவரது தந்தையாரும் தனக்கான காணியைப் பெற்று அக்காணியைப் புனரமைத்து இல்லத்தை கட்டமைப்பதற்கான செயற்திட்டங்களைத் தொடங்கி அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் வன்னி மண்ணின் வரலாறு கூறும் நினைவுச்சான்றுகளும், நிலங்களும், இயற்கை வளங்களும் நிறையப் பெற்ற கிளி/ வன்னேரிக்குளம் கிராமத்தில் சோலையெனும் பகுதி மூன்று வயது வரை பசுந்தீவாம் நெடுந்தீவில் மழலைப்பருவம் மகிழ்ந்தே சிறக்க தனது மூன்றாவது வயதில் வன்னேரிக்குளம் சோலையில் தன் மழலைப் பருவத்தைத் தொடர்ந்தார்.
அன்னைமண் அழகுகொஞ்ச பெற்றோர் அன்பும் பெரியோர் அரவணைப்பும் நிறைந்து வளர்ந்து தனது ஆரம்பக் கல்வியை வரலாறு சிறந்திருக்கும் வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்தில் கல்விப் பயணத்தில் கால் பதித்தார். தொடர்ந்து அங்கேயே கற்று சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். கல்வி. விளையாட்டு. கலைகள் என அனைத்திலும் உயர்வு பெற்று தனக்குப் பிடித்த துறையிலும் கல்விகற்று கற்றற்திறன் மிகப்பெற்று வளர்ந்தார்.
கற்கும் காலத்தில் கனத்தன நாட்கள். பத்து வயதில் துள்ளித் திரிப்பும் பள்ளிப்பருவத்தில் அள்ளி நிறைக்கும் ஆனந்தக்கற்கையில் மகிழும் வேளை பண்பு நிறைத்து பாசமாக வளர்த்த தன் தாயைப் பிரிந்தார். தாயைப் பிரிந்த சோகம் தாளாது தந்தையாருடன் தன் வாழ்வைத் தொடர்ந்தார். தாயின் இழப்பால் தவித்த மனதிற்கு ஆறுதலாக அன்புத் தந்தையின் அரவணைப்பு அதிகரிக்க தாய்வழிச் சொந்தம் தந்தைவழிச் சொந்தமென தனிமை நிறைந்த வாழ்வை இனிமையாக்கினார்கள். பெற்றவர் சொந்தங்களும், ஊர் மக்கள் பாதுகாப்புமாக இணைந்து அவரை அன்பாக வளர்த்து கல்வியைத் தொடர வைத்தனர். தந்தையின் அன்பில் தலைமகன் கற்றற்திறன் அதிகரித்தது.
தாயை இழந்த சோகம் தாங்காது கல்வியைத் தொடர முடியாமல் தவிர்த்தார்.அவ்வேளையில் தந்தையாரின் சொந்தங்கள் தாங்கி அணைத்து பாதுகாப்பாக தொடர்கல்வியை தொடர வைத்தனர். தந்தையின் சகோதர சகோதரிகள் அத்தனை குடும்பத்தாருடனும் நெருக்கமான அன்பை வளர்த்தார். அவர்கள் இல்லங்களில் சிறிது காலங்கள் வாழ்ந்து அவர்கள் வாழ்ந்த ஊர்களாகிய நெடுந்தீவு, யாழ்ப்பாணம், வன்னேரிக்குளம், வவுனிக்குளம், உருத்திரபுரம். மல்லாவி, அக்கராயன். ஒட்டுசுட்டான். பூவரசங்குளம், வவுனியா என பல இடங்களுக்குச் சென்று சில காலம் வாழ்ந்து சிலருடன் அதிககாலம் தங்கி தன் கல்விப்பயணத்தைத் தொடர்ந்தார். மனம் கனிந்து மகிழும் மாணவப் பருவத்தில் சிறப்பாக உயர்ந்து பாடசாலையில் நடைபெற்ற தேர்வுகளில் சிறந்த பெறுபேறுகள் பெற்று நின்றார்.
குடும்ப சூழ்நிலைகளினால் கல்வித் திறனின் சிறப்புடன் தொழில் தேடும் பணியில் தன்னை ஈடுபடுத்திய வேளையில் துறைசார் தொழில் கிடைக்கப் பெறாது துன்பமடைந்த வேளை சுயதொழிலை ஆரம்பித்தார். அப்பொழுது துரதிஷ்டவசமாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கப் பணியாளராக வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
சிறு வயதிலேயே தாயை இழந்த சோகம் மனதில் தொடரவும் தன் சகோதரர்களை வளர்க்க மிகுந்த ஆசை கொண்டார். தாயின் பிரிவு
தன் தம்பிமார் தங்கை ( சிறி. ஜெயம், தங்கைராணி ) மூவருக்கும் எந்தக் குறையும் வராது தந்தையுடன் இணைந்து அவர்களை வளர்த்து வந்தார். அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க அத்தனை கற்றற் செயற்பாடுகளையும் நிறைவேற்றி வந்தார். வாழ்வு நிறைந்த குடும்பப் பொறுப்புக்கள் தொடர்கையில் பிள்ளைகள் நால்வரையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பெரியோர்கள். சொந்தங்களின் கட்டாயத்தினால் தந்தையாருக்கு மறுமணம் செய்ய பெண் பார்த்தார்கள்.
சிறந்த இதன் காரணமாக தந்தையாருக்கு ஏற்றாற் போல் பண்புடைய பெண்ணாக நெடுந்தீவை சொந்த இடமாகவும் பெரியதம்பனையை வசிப்பிடமாகவும் வாழ்ந்து வந்த நற்குணமுடைய நாகம்மா என்பவரைத் திருமணம் செய்து வைத்தார்கள். தந்தையார் மனைவி பிள்ளைகள் என வாழ்ந்தது கண்டு தானும் பேரானந்தத்துடன் வாழ்ந்து இளமைப் பருவத்தை எட்டி நின்றார். சிறிதுகாலம் பெரிய தம் பனையில் தன் வாழ்வைத் தொடர்ந்தார்.
இளமைப்பருவம் இனிமையாய் வளர மணப்பருவம் வந்தது. தந்தையின் அரவணைப்பும் சொந்தங்கள் பாசமும் சிந்தையை மகிழவைக்கையில் மணப்பருவம் நிறைந்த நற்பண்பாளனுக்கு அவர் தம் தந்தைவழி உறவான வட்டுக்கோட்டை மூளாய், நெடுந்தீவு மேற்கு என இரு ஊர்களை சொந்த இடமாகக் கொண்ட அன்பு விஷ்வநாதன் செங்கமலம் ( தந்தையின் சகோதரி ) தம்பதியினரின் அன்பான மூத்தமருமகள் தனலட்சுமி ( சொர்ணம் ) என்ற அறிவும், அழகும் நிறையப் பெற்ற பெண்ணை 1973 இல் திருமணம் செய்து வைத்தனர் பெரியோர்கள். இருமனம் இணைந்த திருமணம் இனிதாக நடைபெற்று இல்லறவாழ்வு இனிதாக ஆரம்பமானது. இல்லறவாழ்வில் இனிமைகள் நிறைத்து இரு குடும்பங்களும் அன்பும் பெருமையும் மிகுந்த உறவுகளாக ஜெகநாதன், பத்மநாதன், ஜெயலட்சுமி. தில்லைநாதன், இராஜலட்சுமி, சீதாலட்சுமி அனைவரின் அன்பு மைத்துனராக இரட்டிப்பு உறவாக இணைந்தது மட்டுமல்லாது தனது பெரியப்பா ( இராமலிங்கம் ) வின் மகளையும் தன் மைத்துனர் ஜெகநாதன் அவர்களுக்கு பெரியப்பாவின் மகள் புஸ்பவதிக்கும் அதே ஆண்டில் சொந்த உறவுகளுக்குள் திருமணம் நடைபெற்றது கண்டு மிக்க மகிழ்வு கொண்டு அனைவருடனும் அன்பான தலைமகனாய் தன் இல்லறவாழ்வை நல்லறமாக்கினர்.
சிறப்பான தொழிலும், நிறைந்த மகிழ்வுமாக தனது இல்லற வாழ்வை ஆரம்பித்த வேளை மீண்டும் பசுமை நிறைந்த வயல்களும் பார்ப்போரை அதிசயிக்க வைக்கும் இயற்கை வளங்களும் இறைநிறை கோவில்களுமாக அமையப்பெற்ற வன்னேரிக்குளத்தில் தன் இல்லற வாழ்வைத் தொடர்ந்தார்.
இல்லறம் நல்லறமாக அமையப் பெற்று ஆனந்தமான வாழ்வை வரமாக்க பானுமதி, பிரபாகரன், வளர்மதி மூவரும் சந்ததியின் பெருமை கூற வந்தனமாக பிறந்து வளர்ந்தார்கள். பிள்ளைகள் மேல் அன்பும் அரவணைப்பும் நிறைத்து அவர்களுக்கான அத்தனை கடமைகளையும் ஆற்றி மனைவியும் தானுமாய் மகத்தான இன்ப வாழ்வை இரசித்தனர். மூன்று குழந்தைகளையும் முத்தாகப் பாதுகாத்து சிறந்த கல்வி அறிவூட்டி சமூகத்தில் சிறப்பான பிள்ளைகளாக வளர்த்து வந்தார். இல்லற வாழ்வில் நல்லற மேன்மையுடன் வீடமைப்பு அதிகார சபையின் பணியாளரானார். தொடர்ந்து யாழ்ப்பாணம். காங்கேசன்துறை சிமெந்து நிறுவனத்திலும் பின்னர் கிளிநொச்சியில் அமையப் பெற்ற அதன் கிளையிலும் தொடர்ந்து பணியாற்றி வந்தார். தொடர்ந்து சமூகப்பணி. சமயப்பணி தன்வாழ்வை மேற்கொண்டார். தந்தையாரின் குல தெய்வமான பிள்ளையார். நாகதம்பிரான் சிலைகளை வைத்து பசுமை நிறைந்த வயற்காணியில் அமையப் பெற்ற அம்பிகை அருளாட்சி செய்யும் வேம்பு மரநிழற்பரப்பில் அமையப் பெற்ற நாகதம்பிரான் குடி கொண்ட வேப்பமரப்பொந்தில் நாகம் காட்சி கொடுத்ததன் அதிசயத்தால் அங்கே தெய்வங்களின் சிலைகளை வைத்து பூஜைகளும் செய்து மிகுந்த பக்தியுடையவராக நம்பிக்கையும் நல்லெண்ணமும் கம்பீரத் தோற்றமும் கொண்டு தன் சொந்தம், சுற்றம், குடும்பம். கோவில் பணி என தனது வாழ்வை இரசித்து மகிழ்ந்தார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், அன்பும் பாசமுமாக மகிழ்ந்து பெருமைமிகு தந்தையாக தன் கடமைகளை மேலுமாய் நிறைவேற்றத் தயாரானார். தந்தை தாய் அன்பு கண்டும் தாலாட்டும் மகிழ்வில் நின்றும் கற்றலின் கனிவு கண்டும் பிள்ளைகள் மூவரும் ஆனந்தமாக மகிழ்ந்தனர். பிள்ளைகளின் பருவ வயதுகள் சிறந்து வளர்ந்து, அன்பும். பாசமும் நிறைந்த அழகுக் குழந்தைகளாகக் கண்ட தந்தை அவர்களது இளமைப்பருவம் கண்டு இன்புற்றார். மணப்பருவம் வந்ததென மகிழ்ந்தார். தம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆயத்தமானார்கள் இருவரும்.
அன்பும் அறிவும் அழகும் நிறையப்பெற்ற மூத்தமகள் ஆசைநிறை பானுமதி (வதனா ) அவர்களுக்கு வரனாக யாழ்/ புங்குடுதீவு, நெடுந்தீவு சொந்த இடமாகவும் கிளி/ உருத்திரபுரம் வசிப்பிடமாகவும் வாழ்ந்து வரும் அன்பான சின்னத்துரை அபிராமி தம்பதிகளின் மூன்றாவது அன்பு மகன் ஜீவாகரன் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பெற்று மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் திருமணம் நடைபெற்று மகிழ்ந்து அவர்களது இல்லற வாழ்வின் ஆனந்தமாக அன்பு கொஞ்சும் ஆசைக்குழந்தைகளாக சுவீனா. சுவீதன், சுவீகன், அபிதன் செல்வங்கள் பேரக்குழந்தைகளாக மனதை மகிழ்விக்கையில் அன்பும் ஆளுமையும் நிறையப் பெற்ற செல்ல மகன் பிரபாகரன் (பிரபா) அவர்களுக்கு மணமகளாக யாழ்/மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தை சொந்த இடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பான ஐயாத்துரை. சறோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மகள் துஷ்யலாதேவி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தார். இவர்கள் இருவரது இல்லற நல்லறத்தில் ஷர்விகா . பதுஸ்மிகா என இரு பேரக் குழந்தைகள் பிறந்தது கண்டு மகிழ்ந்தார் தொடர்ந்து. கடைக்குட்டி ஆசைமகள் வளர்மதி ( காஞ்சனா ) அவர்களுக்கு வரனாக யாழ் / நயினாதீவு. நெடுந்தீவு சொந்த இடமாகவும் கிளி/ வன்னேரிக்குளம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பான சுந்தரம் இராசேஸ்வரி அவர்களின் மூன்றாவது மகன் குணசேகரன் அவர்களுக்கு திருமணம் நடைபெற்று அவர்கள் இருவரின் இல்லற வாழ்வின் மகிழ்வாக பரணீதரன், நக்கீரன், தரணிகா, டிலக்சனா செல்வங்கள் அன்புமிகு பேரர்களாகப் பிறந்தது கண்டு மகிழ்ந்தார். இவ்வாறு தன் அன்பு நிறை மூன்று பிள்ளைகள். மருமக்கள். பேரக்குழந்தைகள் அனைவருடனும் அன்பால் மகிழ்ந்த பேரானந்தமுடன் வாழ்ந்து வந்தார்.
தாயகத்தில் ஏற்பட்ட தாங்கொணாத் துன்பம் ஒருபுறம் அதனால் இடப்பெயர் வாழ்வு மறுபுறம். இத்தனைக்கு மத்தியில் மீண்டும் தாம் வாழ்ந்த கிளி/ வன்னேரிக்குளத்தில் இயங்கி வந்த நீர்ப்பாசனத் திணைக்களப் பணியாளராக தனது கடமையைத் தொடர்ந்தார். இப் பணிகளுக்கு இடையே இணக்கசபை வழக்கு ஆலோசகராகவும் சேவையாற்றினார். தொடர்ந்து 2019 இல் கிராம பொலிஸ் அங்கத்தவர் ஆலோசகராகவும் பணியாற்றினார். அது மட்டுமல்லாது ஆலய பரிபாலன சபைகளிலும் கிராம முன்னேற்ற அபிவிருத்தியிலும் சமூக சேவைகளிலும், உறவுகள், ஊரவர்கள் நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்தி அகம் நிறை அன்புடனும், பண்புடனும் மிகுந்த பாசமுடன் அர்ப்பணிப்புகள் நிறைத்து வாழ்ந்து வருகையில் உலகில் ஏற்பட்ட கொறோனா தொற்று நோய் அறிவிப்பில் அகப்பட்டு கட்டாய தடுப்பூசி போட வேண்டிய திணிப்பினால் தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு துடித்தார். அத்தனை சேவைகளையும் இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தடுப்பூசி ஏற்றி தடைப்பட்ட வாழ்வானது எண்ணி மனம் நொந்தார். தன் வாழ்வினில் ஏற்பட்ட மகிழ்வு கண்டு வாழ்க்கையில் இடையே ஏற்பட்ட இன்னல் கண்டு துடித்தார். சிறு வயதில் தாயாரை இழந்து தவித்தது. தன் அன்புத் தங்கையைப் பறி கொடுத்தது, தன் மாமாவை மைத்துனியை இழந்து பின்னர் தனது மாமியை இழந்தது. மிகத் துயர் இழப்பாய் தன் அன்புப் பேரக்குழந்தையைப் பறிகொடுத்தது, மைத்துனரை இழந்தது, அன்புத் தம்பிமாரை இழந்தது. இவ்வாறு அத்தனை துயர்களையும் தன் மனதில் நிறைத்து அதிக வலிசுமந்தவராய் தடுப்பூசியின் தாக்கம் இன்னும் அதிகரித்தது. இவ்வாறு பல துன்பங்களுக்கு மத்தியிலும் இறுதிக்காலத்தில் எழுந்து நடக்கவும் முடியாது வேதனை அடைந்தார்.
தன் வேதனைகளை மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுக்காது அன்பும், இலட்சிய உறுதியும், திடமான மனதுமாக தன்னைப் பாதுகாத்து தன் மனைவியை அம்மா என அழைத்து அன்பாக அகமகிழ்ந்து பிள்ளைகள், மருமக்கள், பேரக்குழந்தைகள், உறவினர்கள், ஊர்மக்கள் என அனைவருடனும் பாசமுடன் அன்பாக உரையாடியும் எல்லாம் வல்லோன் திருநாம நாதம் எந்நாளும் கேட்டு மகிழ்ந்து வாழ்ந்து வருகையில் வல்லவன் தானும் தன் மனம் மறந்து செயற்படுகையில்
அன்னை மண்ணை ஆழமாக நேசித்த புனிதரை தாய் மண் விடுதலைக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த புனிதர்களின் புனித நாளாம் கார்த்திகை 27.10.2025 வியாழக்கிழமை பிற்பகல் 16:50 மணியளவில் சொந்தமும் சுற்றமும் சூழ்ந்திருக்கும் வேளை எல்லோரையும் பிரிந்து விண்ணவரை நினைந்து திருவாளர். குமாரசாமி பரமானந்தம் அவர்கள் சிவனடி சேர்ந்தார்.
அன்பால் வளர்ந்து அருளால் உயர்ந்து
அயராது உழைத்து ஆளுமை வளர்த்து
துன்பங்கள் அகற்றி தூயவை நினைந்து
தன்பணி நிறைத்து தடங்கள் பதித்து
இன்பமான வாழ்வை இறுகப் பற்றுகையில்
நுண்ணுயிர் தடுப்பூசி நுழைத்தது துன்பத்தை
அந்நிலை தனிலும் தன்நிலை காத்து
அறம் தந்த பெருமையில் அன்பைப் பதித்தவர்
பாசத்தைப் பொழிந்த பரம ஆனந்தம்
தேசம் வாழும் உறவுகளின் தெய்வீகப் பெரியோன்
வீசும் காற்றின் வழியாக விண்நோக்கி ஆன்மா சென்றாலும்
பேசும் காலம் யாவிலும்
நேசம் நிறை நினைவுகள் நிலைத்திருக்கும்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
குடும்பத்தினர்
